தீபாவளிக்கு ஊருக்கா? உறவுகளுடன் மகிழ்ச்சித் தருணங்களை ஏற்படுத்துங்கள் இப்படி! #Deepavali2022
தீபாவளி கொண்டாட்டம் |
புத்தாடைகள், பலகாரங்கள், பட்டாசுகள், சிறப்பு நிகழ்ச்சிகள் என இந்தப் பண்டிகையின் பரிமாணங்கள் பல. ஆனால், உறவுகள் கூடுவதுதான் இந்நாளின் ஜீவ சந்தோஷம். வேலை, தொழில் என்று வேர் பிரிந்து கிடப்பவர்கள் எல்லாம், சொந்த ஊர் நோக்கிச் சென்று சேர்ந்திருப்பார்கள். உள்ளூரில், பக்கத்து ஊர்களில் இருக்கும் உறவுகளும் ஓரிடத்தில் ஒன்றுகூடி மகிழ, தித்திக்கும் திருநாள் இது.
பிள்ளைகளின் வரவை எதிர்நோக்கிக் காத்திருக்கும் பெற்றோர்கள், தலைதீபாவளி கொண்டாடும் தம்பதிகள், குடும்பத்தின் புதுவரவாகச் சேர்ந்திருக்கும் கைக்குழந்தையுடன் இந்த வருட தீபாவளியை கொண்டாடும் குடும்பங்கள், எந்த தீபாவளிக்கும் அம்மா வீட்டுக்கு வரத் தவறாத மகள்கள், பண்டிகை உடுப்பாக முதன்முதலாக புடவை, வேட்டி உடுத்தும் பேத்தி, பேரன்களைப் பார்க்கும் பூரிப்பிலிருக்கும் தாத்தா, பாட்டிகள்... இப்படி ஒவ்வொரு வீட்டுக்கும் ஒவ்வொரு விதமான பண்டிகை மகிழ்ச்சி.
என்றாலும், உறவுகள் ஓரிடத்தில் கூடுவதில் மட்டுமே பண்டிகை நிறைந்துவிடுவதில்லை. அந்தத் தருணத்தை, தங்களுக்கு இடையிலான பிணைப்பை அடர்த்தியாக்கப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். ட்ராவல் பேக்கை வைத்துவிட்டு, 'நல்லா இருக்கீங்களா..?' என்று வீட்டிலிருப்பவர்களை விசாரித்துவிட்டு, '@native' என்று ஸ்டேட்டஸ்களை போட்டுவிட்டு தீபாவளி கடமை முடிந்ததாக மொபைலில் மூழ்குவதும், டிவியை விட்டு அகலாமல் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள் பார்த்துக்கிடப்பதுமா பண்டிகை?
வீட்டிலிருக்கும் அனைவரின் பெயர்களையும் சீட்டாக எழுதிப்போட்டு, ஒவ்வொருவரும் ஒவ்வொரு சீட்டு எடுத்து, அதில் இருப்பவர் பற்றிய 5 பாசிட்டிவ் விசயங்களைச் சொல்ல வேண்டும் என்று 'கேம்' விளையாடி, அதை வீடியோக்களாக எடுத்துவைத்துக்கொள்ளுங்கள். அல்லது, தாயம், கார்ட்ஸ் என அனைவரும் சேர்ந்திருக்கும் மகிழ் தருணத்தை ஏற்படுத்துங்கள். திருமணம், வீடு கட்டுவது என வரும் வருடத்தில் செய்ய வேண்டிய முக்கிய காரியத்தை அனைவரும் சேர்ந்து ஆலோசியுங்கள். இப்படி, க்வாலிட்டி டைம் ஏற்படுத்திக்கொள்ளுங்கள்.
பல உறவுகளும் ஒன்றாகக் கூடும்போது உரசல்கள் ஏற்படுவது இயல்புதான். ஆனால் அதற்கு ஒருபோதும் இடம்கொடுக்காதீர்கள். 'உனக்குத்தான் இந்த கலர் நல்லாயிருக்காதே அப்புறம் ஏன் இந்தப் புடவையை எடுத்த..?' என்று நாத்தனாரை முகம்வாட வைக்க வேண்டாம். அனைவரும் ஹாலில் இருக்க, தொடர் வேலைகளால் அடுப்படியிலேயே கிடக்கும் வீட்டுப் பெண்களை கவனித்து ஓய்வுகொடுக்கலாம். பண்டிகை முடிந்ததும் கையசைத்து கிளம்புவதற்கு முன், மாற்றப்பட வேண்டிய தண்ணீர் மோட்டார், தேவைப்படும் குளுக்கோமீட்டர் என்று வீட்டிலிருப்பவர்களின் தேவைகளைக் கேட்டறிந்து நிவர்த்தி செய்துகொடுத்துவிட்டு, கிளம்புவோம்.
நினைவுப் பெட்டகம் இனிப்பான தருணங்களால் நிறையட்டும்... தீபாவளி திருநாள் வாழ்த்துகள்!
No comments